இந்தியா
மீன் வடித்த விழியில் கூர் வாளின் வீரம் கண்டேன், புகழோடு, அறனும், செல்வமும் சேர்த்து கடல் தாண்டி கோலோச்சிய மூவேந்தர் கண்டேன், பட்டின் பகட்டும், நெற்கலஞ்சியத்தின் செழிப்பும் மண்ணில் இறுகிய ஆபரணங்களும், ஒன்றாய் மெருகேறிய பாரதம் கண்டேன், உருவங்கள் மாறினாலும் உள்ளம் ஓன்றான பன்முக வழிப்பாட்டும், இறையும் கண்டேன், செருக்கோடு புவியில் வாழ்ந்த நான் வெண்தோல் அணிந்த கயவனின் கூட்டம் எக்குதிக்கும் பரவக் கண்டேன், நிழல் தேடிய அயலான், வேர் தகர்த்து மண்ணிற்குரிய அடையாளங்களை புதைக்கக் கண்டேன், விடுபடும் வேட்கையும், கலவரமும், பற்றும் கலந்து ஆண்டு முன்னூறு கடந்ததைக் கண்டேன், நள்ளிரவில் சுதந்திரம் வானுயரக் கண்டேன், நெடுங்கால விளங்குகள் அவிழ்க்கப்பட்டிருப்பதை மைந்தர்கள் கூத்தாடியதைக் கண்டேன், என் மக்கள், என் நிலம் என காலம் கடந்து செல்வதை உற்று நோக்கிய ஆகாயத்தின் மின்னல் நிலத்தில் பிளவுப்படுவதைக் கண்டேன் பெண்ணின் கண்ணியம் தூற்றப்படுவதைக் கண்டேன், கோபுரங்கள் உயர்ந்தாலும் சாமானியனின் கதவுகள் அடைப்பட்டிருப்பதைக் கண்டேன், நாகரீக மோகத்தில் நானென்ற சுய அடையாளம் இழப்பதைக் கண்டேன், மாற்றங்களின்...