உடமை

உள்ளடக்கம்
 
கவிதை "நான், " என்ற சொல்லின் ஆழமான தேடல். இது தனிப்பட்ட அகந்தை அல்ல: இயற்கை, உழைப்பு, பக்தி, தாய்மை, வயது, விதி, விடுதலை அனைத்தையும் தன்னுள் ஏற்றுக்கொள்ளும் முழுமையான மனித அடையாளம்.

கவிதை

மழை பொய்த்த பூமியின்
தாகம் எனது,

நிலம் உழுத வேர்வையின்
பசுமை எனது,

வண்ணம் சூடிய இயற்கையின்
கலை எனது,

தென்றல் உரசிய கரங்களின்
இசை எனது,

இறை கலந்த தியானத்தின்
பக்தி எனது,

பயணத்தின் முடிவுறை எழுதும்
முதுமை எனது,

புதைமண் வடிவம் காணும்
ஆற்றல் எனது,

மடி தவழும் மழலையின்
தாய்மை எனது,

மனம் இசைந்து இமைகள் சந்திக்கும்
தாலாட்டு எனது,

விதி சுமந்து வையகம் வாழும்
பிறப்பு எனது,

துயில் கலைத்த சிறையின்
சுதந்திரம் எனது,

" நாம்" கலைந்து " நான்" சேரும்
முயற்சி "எனதே எனது".

நாட்குறிப்பு

உலகின் வானமும், நிலமும், சுற்றமும், சூழலும் என்னை சார்ந்து அமைய வேண்டும் என்பது உலகத்தோரின் உரிமை கலந்த ஆசையும், எதிர்பார்ப்பும். அனைத்தும் கண்ணசைவில்  பெறும் தாகம், ஊக்கமின்மையால் தரிசாய் கிடக்கும் எண்ணங்கள் நூறாயிரம். கால் பதிந்த நிலமும், சுவாசம் கலந்த காற்றும் தனக்கென உரித்தாக்கும்  இயல்பு தோன்றலில் கலந்தது. உடமைகள் விழிகள் கடந்த சுற்றம் சார்ந்தவைகள் அல்ல, விழி மூடிய கனவுகள் சார்ந்தவை. உண்மை உணர்ந்த தருணம் வரிகள் ஒன்றினைந்தது உடமையாய்....... உங்கள் பார்வைக்காக.


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இயற்கை

நானும் அவளும்