பெண்ணெனும் நான்........
பெண் என்னும் அகராதி சாபத்திற்குள் அகப்பட்ட வரம்.
பிறந்ந பாதையில் வரங்கள் பின்தொடர்வதுமில்லை, சாபங்கள் வழி மறுப்பதுமில்லை.
நிழலை உற்று நோக்கும் கனம், தனிமை முழுவதுமாய் ஆட்கொண்டிருக்கும்.
தனிமையில் இரவுக்கும், வெளிச்சத்திற்கும் வேறுபாடில்லை. உணர்வுகளின் துணைக்கொண்ட ஆற்றலின் வடிவம் சிகரம் கடந்து செல்லும்.
வழித்துணையின் பல்லக்கு அயராமல் சுமந்தாலும் இளைப்பாற ஒரு அடியேனும் தனக்கென பகிர்ந்திருக்க வேண்டும்.
உபயம் சேர்க்கும் கற்சிலையாய் ஊர்வதை கடந்து, உளி செதுக்கிய பெண் உருவமாய் நகர்வது சிறப்பு.
எண்ணங்களின் அலைவரிசை மனதின் இசையாய் வெளிப்பட, பாதங்கள் வண்ணத்தில் நனைந்திருக்க வேண்டும்.
இருளில் நிறம் மறைந்தாலும் செவிகள் இன்புற்று கடந்து செல்லும்.
நான் படைத்த " பெண்ணெனும் நான்"
உணரவிருக்கும் காலத்தின்
கவிதைகருவறை கோப்பைக்குள்
உயிரெனும் ஆற்றலோடு
வடிவமில்லா சிறுதுகளாய்
அங்கும், இங்கும் அலைந்து
ஓரிடத்தில் இளைப்பாறினேன்.
இயற்கை வரமளித்த
இரு இனங்களின்
ஒரு இனமாய்,
காற்றும், செந்நீரும்
ஒரு சேர கலந்து
கருவண்ணம் ஆட் கொண்ட
அறையில்,சலனமில்லாமல்
வீற்றிருந்தேன்.
தனிமையில் நான் உறங்க,
இரு கரங்கள் பற்றிக்கொண்ட
வெதுவெதுப்பில்,
ஒரு குரலின் தாலாட்டில்.
ஒவ்வொரு திங்களாய்
பொலிவு பெற்றேன்.
என் அறையின்
நீளம் அகலம் குறைய,
உயிர் நீர் சுவாசம் தர,
என் வாசல் எதுவென்று
கொடியசைத்து வினவினேன்.
என் பாதம் தரை தொட
என் அறையின் நினைவுகள்
காலத்தோடு பயணிக்க
என் தாய் எனக்கு
பரிசளித்தாள்,
உயிர் கோப்பை என்னுள்
புதைத்திருந்தாள்..
பெண்ணென உருவெடுத்தேன்.
பெண்ணெனும் நான்..
Delighful poem
பதிலளிநீக்குFantastic
பதிலளிநீக்கு