அறியாதது

உள்ளடக்கம்

இந்தக் கவிதை வாழ்க்கையின் பல பரிணாமங்களை ஆழமாக ஆராயும் தத்துவப் பயணமாகும். மண், மழை, விதி, காற்று, வானவில், போன்ற இயற்கை உருவகங்களின் மூலம் மனிதன் அனுபவிக்கும் உணர்வுகள், உறவுகள், உண்மை, துரோகம், நினைவுகள் ஆகியவை வெளிப்படுகின்றன.
ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதை உணரும் தனித்தன்மை இருக்கிறது என்ற கருத்தை கவிதை வலியுறுத்துகிறது. இறுதியில் மனிதன் அறிந்ததாக நினைப்பது எல்லாம் அறியாமையின் தொடக்கமே என்றும், விழித்திருந்தாலும் முழு பார்வை இல்லாத நிலையிலேயே வாழ்கிறான் என்றும் ஒரு ஆழமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.

கவிதை

மண் புழுதியின் ஏக்கம்
மழை சாரல் அறியும்.

விண்கல் பயணம்
ஆழ்துளை அறியும்.

விழுதுகள் படரும் நேரம்
விதி அறியும்.

பிறப்பின் காலம்
வம்சம் அறியும்.

எண்ணங்கள் அசைபோடும் வேகம்
காற்று  அறியும்.

உயிர்தூறல்  எதுவரை
வாழ்நாள் அறியும்.

நிறங்களின் ஆயுட்காலம்
வானவில் அறியும்.

உண்மை இடறிய கணம்
துரோகம் அறியும்.

நிலையில்லா நிலத்தின் அகந்தை
கல்தூண் அறியும்.

கடந்த காலத்தின் சுமை
வரும்காலம் அறியும்.

வீரத்தின் வலிமை
மகுடம் அறியும்.

புலமை புகுந்த வரிகள்
மொழி அறியும்.

உறவில் பதிந்த கீறல்கள்
இதயம் அறியும்.

மனங்களின் உரசல்கள்
நா அறியும்.

அறிந்ததன் அளவுகோல்
அறியாமையின் தொடக்கத்தில்...
தொடக்கத்தின் வாய்ப்புகள்
விழித்திருந்தும் பார்வையற்றவை..

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடமை

இயற்கை

நானும் அவளும்