அலைகள்
உள்ளடக்கம்
" அலைகள்" - வாழ்க்கையை ஒரு தொடர்ச்சியான உள் மற்றும் வெளிப்புற பயணமாகப் பார்க்கும் கவிதை. இங்கு நிழல்கள் என்பது கடந்த கால ஆனுபவங்கள், நினைவுகள், வேதனைகள், தோரணம் என்பது அவற்றை அலங்கரித்து ஏற்றுக்கொள்ளும் மனநிலை- உண்மை( நிஜம்) என்பது வெற்றிடத்தையும், வேகத்தையும் தன் வசப்படுத்தும் சக்தியாக வர்ணிக்கப்படுகிறது- அது அழகிய நிறங்களைக் கூட கரைத்து விடும் ஒரு துல்லியமான அனுபவமாக.
பிரிவு, வறுமை, தோல்வி போன்ற வாழ்க்கையின் கட்டங்கள் இங்கு சோகமாக அல்ல, பரிணாம நிலைகளாக பார்க்கப்படுகின்றன. பின் நோக்கிய நினைவுகள் குவிந்தாலும், முன்நோக்கிய பயணம் நிற்கவில்லை. வறுமை தடையாக இருந்தாலும், கானலில் கூட பசுமை முளைக்கும் என்பது போல் நம்பிக்கை மறையவில்லை.' இரு துணையின் ஒற்றை பல்லக்கு' என்பது காலத்தின் சுமையையும் உறவின் நிலைத்தன்மையையும் ஒரே உருவகத்தில் இணைக்கிறது.
கவிதையின் இறுதியில் தன்னுயர்வு முக்கியமாகிறது. வெளிப்புற உலகின் குழப்பம், தர்க்கம், சிதைவு ஆகியவற்றை கடந்து, தனி மனிதன் தனது உள்ளார்ந்த மகுடத்தை அடையும் நிலை வெளிப்படுகிறது. வாழ்க்கை ( கதம்பம்), ஆனால் ஒரு விதை போல் மனிதன் அமைதியாக வளரும் போது உலகை உடைக்க வேண்டியதில்லை- அவன் உள்ளம் உயர்ந்தால் போதும் என்பதே கவிதையின் மையக் கருத்து.
கவிதை
நிழல்களின் தோரணம்
வண்ணம் ஏற்று,
இமை கதவில் காத்திருந்தாலும்,
மடை திறந்த நீரின் வேகம்
நிறம் கலைத்து,
வெற்றிடத்தை
தன்வசமாக்கிக்கொள்ளும் - நிஜம்
பிரிவில் துயர் மறையும்
வேகத்தில்
பயணத்தை எதிர்நோக்கினாலும்,
பின் நோக்கிய நினைவுகள்
ஓரணியாய் குவியல் சேர்க்கும்.
வறுமையின் கோலம்
இடர் பழிக்க முனைந்தாலும்
கானலில் விளைந்த பசுமை
தடையில்லா
வேகம் காணும்.
கோலங்கள் ஆயிரமாய்
எட்டி நின்றாலும்,
வெண்மையின் கூட்டுக்குள்
சிறகொடிந்து சிலை சேறும்,
வயதின் பொதி சுமக்கும்
இரு துணையின்
ஒற்றை பல்லக்கு.
கரையில் காலூன்றி
பார்வையில் பயணித்த இலக்கு,
உண்மையின் தோணியில்
உடல் வருத்தி, கடக்கும்
வேர்வையில்
செயலிழந்து சிதைந்து போகும்.
உணர்வில்லா
மணல் கூட்டத்தில்
தர்க்கம் கலைத்து,
நொடியில் நிலைகுலையாமல்,
நொடி சேர்த்த மணித்துளிக்குள்
துயில் கலைத்து,
துயர் கடந்து
மகுடம் சேரும் கரங்கள்
தன்னுயர்வின் தொடக்கம்.
கதம்பம் தொடுத்த
நிலம் தகர்ப்பதில்லை.
Beautiful
பதிலளிநீக்கு