எல்லை

உள்ளடக்கம்

இந்தக் கவிதை மனித வாழ்க்கை இயற்கையின் சட்டங்களைப் போல எளிமையுடனும், உண்மையுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது போல தோன்றுகிறது. இயற்கை எந்தச் செயலும் எதிர்பார்ப்பின்றி தன் இயல்பின்படி நடைபெறுகிறது.
மலர் நறுமணம் தருவதற்கு யாருடைய முகவரியும் தேடவில்லை.  விதை முளைக்க முன் ஆய்வு செய்வதில்லை. கதிரவன் உதித்து மறைவது அவனது கடமை.
அதேபோல் மனிதனும் தன் பண்பை காத்து வாழ வேண்டும். கர்வம், சீற்றம், கண்ணியமின்மை போன்றவை இயற்கையின் சீரிய ஒழுங்கில் இடமில்லை என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது. மனித சமுதாயம் இயற்கையைப் போல் சீராக இருந்தால் அதுவே இறை உணர்வை அடையும் வழி என்னும் தத்துவப் பின்னணியில் இந்தக் கவிதை அமைந்துள்ளது.

கவிதை

மலரில் கரைந்த நறுமணம்,
காற்றின் முகவரி தேடுவதில்லை.

சுவை கலந்ந கனியின் மொழி,
புலமைக்கு காத்திருப்பதில்லை.

விதை உண்ட செம்மண்,
பசுமை உமிழ ஆராய்வதில்லை.

தரை பயணம் முடியும்வரை,
மழை நீர் துணைசேர்வதில்லை.

மீன்களின் ஆயுள் முடியும்வரை,
நாரைகளின் தவம் கலைவதில்லை.

இலைகள் ஆடும் நாட்டியத்தை,
இடியின் தாளம் நிர்ணயிப்பதில்லை.

நாணம் புதைத்த பெண்ணின் உருவம்,
கர்வம் சேர்க்க  தயங்குவதில்லை.

சுற்றம் கனித்த செவியின் ஆற்றல்,
மௌனம் பேச விரும்புவதில்லை.

பண்பாடறியா மொழியின் சீற்றம்,
கண்ணியத்தில் வாசம் செய்வதில்லை.

கிழக்கில்  உதித்த கதிர்கள்,
மேற்கில் தலைசாய  சலித்ததில்லை.

தானம் பெற்ற கரங்களின் தோய்வு,. வறுமை கடக்க தவறியதில்லை.

கவணம் கேட்கும் எம்மண்ணின் உணர்வு,
கடல் கடந்தும் மறைவதில்லை.

இயற்கையின் வரையரைக்குள்,
இறை உணரா விடியல்கள் காட்சிக்கில்லை.



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடமை

இயற்கை

நானும் அவளும்