அலைமகள்

கதிர் விழிக்க உதித்தவளடி - நான்!
வாசலில் ஈரம் காண
விரைந்தவளடி  -நான்!
பச்சரிசிக்  கோலமாய் 
வீற்றிருப்பவள் - நான்!
எறும்பு பசியார மனமகிழ்பவள்- நான்!

நிலவாசல் சௌந்தர்யமடி- நான்!
மஞ்சள், குங்குமம்,
மாவிலை தோரணமும் - நான்!
என் பார்வையில் ஐஸ்வர்யம் வளர
துதிப்பவள்- நான்!

விடியலில் கண்விழிக்கும்
மங்கையடி- நான்!
குளிர் நீராடி,  உடுத்திய தூய ஆடையின்
வாசம்- நான்!
சமையலறை சுத்தத்தின்
அங்கம்- நான்!
அசுத்தம் கலைத்து வாரிய
நிலத்தின் முதலடி - நான்!

பின்னிய கருங்கூந்தலின்
நளினமடி- நான்!
மொட்டவிழா மலர்களின்
வசிப்பிடம்- நான்!
கையில்குலுங்கும் வளையோசையடி - நான்!
பூரண ஆடையின் காட்சியடி- நான்!
வசீகர முகத்தின்
சிரிப்பொலியும்- நான்!

உடல் கசக்கிய  வியர்வையின்
பயணமடி- நான்!
சில்லரை சலசலப்பில்
பரவியவள்- நான்!
அணைக்கட்டி சேர மறுப்பவலும்- நான்!

பசும் நெய் திரித்த அகல் விளக்கின்
பிரகாசமடி- நான்!
பண்போடு ஒளியூட்டும்
தீப்பொறியும்- நான்!

அழகிலக்கியத்தின்
இலக்கணமடி- நான்!
பொருளுணர்ந்து வாசிப்பவரின்
நிழலில்- நான்!

மழலை முகச்சிவப்பின்
புண்ணகையடி- நான்!
குலுங்கி இசைப்பாடும்
தோற்றமும்- நான்!

மெலிந்த வயிற்றின்
அன்னமடி- நான்!
பகிர்ந்தளித்த உணவின்
சுவையும்- நான்!
வெள்ளி கிண்ணத்தில் ஆடம்பரம்
விரும்பவில்லை- நான்!
சுத்தத்தில் பாசமாய் பரிவோடு
நீ அழைக்க
கூரை மீது வாசம் செய்பவள்- நான்!

நானென்று உருவம் இல்லை,
நானென்று அலங்காரம் இல்லை,
நானென்று அழைப்பவள் இல்லை,

என் அம்சமானவளே!

மனை நிறைத்த
உன் புன்னகையில், ஈகையில், அழகில்
அரவணைப்பில் கலந்தவள் நானே
நீயே நானாவேன்....









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடமை

உருவம்

இரண்டெழுத்து